கர்நாடகத்தில் ரெசார்ட், மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் ரெசார்ட், மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு
அது தீவிரமாகி கடந்த மே மாதம் பரவியது. மே மாதம் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளாலும் வைரஸ் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
தற்போது சராசரியாக சுமார் 100 முதல் 130 பேர் வரை உயிரிழந்து வருகிறார்கள். கொரோனா பரவல் குறைந்தாலும், உயிரிழப்பு சற்று அதிகமாகவே உள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதையடுத்து கடந்த 14-ந் தேதி முதல்கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
கடைகளை திறக்க அனுமதி
மளிகை கடைகள், மருந்து கடைகள், கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இவை அனைத்தும் செயல்பட தொடங்கியதால், தலைநகர் பெங்களூருவில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
நகரில் போக்குவரத்து நெரிசல் பழைய நிலைக்கு திரும்பியது. மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது மட்டுமின்றி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது.
58 மணி நேர முழு ஊரடங்கு
கர்நாடக அரசு அறிவித்தபடி கடந்த வாரம் 18-ந் தேதி இரவு 7 மணி முதல் 21-ந் தேதி அதிகாலை 5 மணி வரை 58 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகளை கடந்த 21-ந் தேதி அறிவித்தது. அதன்படி மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் தினமும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
2-வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து தலைநகர் பெங்களூரு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. நகரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
பார்சல்களுக்கு மட்டும் வழங்கலாம்
இந்த நிலையில் கர்நாடத்தில் 2-வது வாரமாக வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த 58 மணி நேர ஊரடங்கு வருகிற 28-ந் தேதி(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த ஊரடங்கையொட்டி பெங்களூருவில் மேம்பாலங்கள் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் ஒரு வழி சாலை அடைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் திறந்திருக்கும். ஆனால் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவமனைக்கு செல்பவர்கள்...
பலசரக்கு கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டு இருக்கும். மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி இயங்கும் என்று அரசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.
அவர்களுடன் உதவிக்கு குடும்பத்தினரும் செல்லலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கான ஏதாவது ஒரு ஆவணத்தை போலீசாரிடம் காட்ட வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை காட்டிவிட்டு பயணம் செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
பஸ்கள் இயக்கம்
பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதே போல் வெளியூர் செல்லும் பஸ்களையும் குறைந்த அளவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் திறந்தவெளியில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் சமூக விலகலை பின்பற்றி அமர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா பேசியதாவது:-
கண்காணிக்க வேண்டும்
கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக மராட்டியத்தில் இந்த வகை புதிய வைரஸ் அதிகமாக பரவுவதாக தகவல் வந்துள்ளது. அதனால் மராட்டிய எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் மராட்டியம், கேரளாவில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த 2 மாநிலங்களிலும் கொரோனா பரவலின் தீவிரத்தன்மை இன்னும் குறையவில்லை. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திருமண மண்டபங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சி அரங்கங்கள், ரெசார்ட்டுகளில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் 40 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இந்த முடிவு வருகிற 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாஸ் பெற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story