தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்: காதல் கணவர் வீட்டு முன்பு மகன்களுடன் பெண் தர்ணா


தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்: காதல் கணவர் வீட்டு முன்பு மகன்களுடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 26 Jun 2021 2:18 AM IST (Updated: 26 Jun 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாலும், வீட்டுக்குள் சேர்க்க மறுத்ததாலும் காதல் கணவர் வீட்டின் முன்பு 2 மகன்களுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோலார்:

காதல் திருமணம்

  கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தொட்டசின்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனில். இவரும், சிக்கஅங்கடஹள்ளி கிராமத்தை சேர்ந்த காவ்யா என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயது மற்றும் 9 மாதத்தில் 2 மகன்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் கடந்த மாதம் மனைவி காவ்யா மற்றும் மகன்களை, சிக்கஅங்கடஹள்ளியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சுனில் அனுப்பி வைத்திருந்தார்.

வேறொரு பெண்ணுடன் திருமணம்

  இந்த நிலையில், மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுனில், வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இதுபற்றி காவ்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் நேற்று முன்தினம் தனது மகன்களுடன் தொட்டசின்னஹள்ளி கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், சுனில் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காவ்யாவை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

  மேலும் சாதியை காரணம் காட்டி, சுனில் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காவ்யாவை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். தன்னை சேர்த்துக்கொள்ளும்படி காவ்யா, சுனில் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காலில் விழுந்துள்ளார். ஆனாலும் அவர்கள் காவ்யாவை விரட்டி உள்ளனர்.

தர்ணா

  இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி தனது காதல் கணவர் வீட்டின் முன்பு 2 மகன்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் அமைப்பினர், காவ்யாவுக்கு ஆதரவாக சுனில் குடும்பத்தினரிடம் பேசி உள்ளனர். அப்போதும் அவர்கள், காவ்யாவையும், அவருடைய மகன்களையும் சேர்த்துகொள்ள மறுத்ததாக தெரிகிறது.

  இதையடுத்து காவ்யா, அம்பேத்கர் அமைப்பினர் உதவியுடன் பி.இ.எம்.எல். நகர் போலீசில் சுனில் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story