நெல்லை மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை;
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையொட்டி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் மீண்டும் கோவில்களை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களை திறக்க வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
கற்பூரம் ஏற்றினர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியதுடன், கோவிலை திறக்க வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இதில் பாலாஜி கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாநகரில் மேலப்பாளையம் அழியாபதீஸ்வரர் கோவில், அக்னீஸ்வரர், குறிச்சி சொக்கநாதர், குறிச்சி முத்தாரம்மன், டவுன் சந்தி பிள்ளையார் கோவில், வாகையடி அம்மன், தொண்டர் சன்னதி, கம்பாநதி காமாட்சி அம்மன் உள்பட 25-க்கும் மேற்பட்ட கோவில்களின் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில் முன்பு நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சிதம்பரம், துணை தலைவர்கள் வைகுண்டராஜா, முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் வாசலில் சூடம் ஏற்றியும், தேங்காய்கள் உடைத்தும் வழிபாடு நடத்தினர்.
அம்பை கிருஷ்ணன் கோவில், அம்மையப்பர் கோவில், உச்சிமாகாளி அம்மன் கோவில் மற்றும் பாபநாசம் கோவில், மூன்று விளக்கு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு விஜயநாராயணம் ராஜகோபாலசாமி கோவில் முன்பு நாங்குநேரி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஆர்தர் தலைமையிலும், சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள சாட்டுப்பால விநாயகர் கோவிலின் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் முக்கூடலிலும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்
Related Tags :
Next Story