நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு வளைகாப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு வளைகாப்பு நடந்தது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சாரா (21) என்ற பெண்ணை ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாரா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு வீட்டில் வளைகாப்பு நடத்த கணவர் ஏற்பாடு செய்து வந்தார். இந்த சூழ்நிலையில் திடீரென சாராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக சாராவை பிரசவத்துக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பிரசவம் தாமதமாகும் எனவும், அதுவரை அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்படி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்த முடியவில்லையே? என்ற ஏக்கம் கருப்பசாமிக்கு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் வைத்து எளிய முறையில் சாராவுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் விரும்பினார். தனது விருப்பத்தை பிரசவ வார்டில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறினார். அவர்களும் அதற்கு அனுமதி அளித்ததால், நேற்று பிரசவ வார்டு விழாக்கோலம் பூண்டது.
வளைகாப்புக்கு தேவையான பூ, வளையல்கள் ஆகியவற்றை கருப்பசாமி வாங்கி வந்தார். செவிலியர்கள் மற்றும் பிரசவ வார்டில் உள்ள மற்ற பெண்கள் முன்னிலையில் சாராவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் எப்படி நடக்குமோ? அந்த அளவுக்கு குறையின்றி செவிலியர்கள் மிகுத்த பாசத்துடன் சாராளுக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம் குங்குமம் தேய்த்து ஆசிர்வாதம் செய்தனர். திடீர் இன்ப அதிர்ச்சியாக தனக்கு நடந்த இந்த வளைகாப்பு எண்ணி சாராவும் ஆனந்தம் அடைந்தார். பிரசவத்திற்கு வந்த இடத்தில் அரசு ஆஸ்பத்திரியில் தனது காதல் மனைவியின் வளைகாப்பு ஆசையை நிறைவேற்றிய கருப்பசாமியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story