தடுப்பூசி டோக்கன் கிடைக்காதவர்கள் சுகாதாரத்துறையினருடன் வாக்குவாதம்


தடுப்பூசி டோக்கன் கிடைக்காதவர்கள் சுகாதாரத்துறையினருடன்  வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Jun 2021 2:57 AM IST (Updated: 26 Jun 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட டோக்கன் கிடைக்காதவர்கள் சுகாதாரத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை
உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட டோக்கன் கிடைக்காதவர்கள் சுகாதாரத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலை பரவிவரும் நிலையில், 3-வது அலையும் வர உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அலைமோதுகின்றனர். உடுமலை நகராட்சி பகுதியில் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதில் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்போது அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதார பணியாளர்கள் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
பழனியாண்டவர் நகர்
இந்தநிலையில் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகவும், அதற்கு 250 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் வாட்ஸ்-அப் மூலம்  தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியில் இருந்தே பொதுமக்கள் இந்த பள்ளிக்கு வரத்தொடங்கிவிட்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. காலை 8 மணிக்கு பிறகு தடுப்பூசி போடுவதற்காக சுகாதார துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் தடுப்பூசிகள் குறைவாக வந்துள்ளதாக கூறி அதற்கேற்ப டோக்கனை கொடுத்துள்ளனர். 
அதனால் டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றமடைந்தனர். அத்துடன் அவர்கள் இதுகுறித்து சுகாதாரத்துறை பணியாளர்களிடம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து டோக்கன் வாங்கியவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. இந்த நிலையில் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேலும் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு அதற்கு ஏற்ப டோக்கன் மீண்டும் வழங்கப்பட்டது. டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லுக்கடை வீதி பள்ளி
இதேபோன்று உடுமலை தங்கம்மாள் ஓடை வீதியில் உள்ள நெல்லுக்கடை வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் நேற்று  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கும் சமூக இடைவெளிகடைபிடிக்கப்படவில்லை.
தடுப்பூசிகள் போடப்படும் பள்ளிகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வரும்நிலையில், பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான டோக்கன் முடிந்து விடுவதால் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர். 
இந்த நிலையில் தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story