திருமணமான 4 மாதத்தில் பரிதாபம் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி மினி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடி காமராஜ் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 32). மினி லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (25). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவகுமாரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகும்.
நேற்று முன்தினம் மாலை சிவகுமார், இரும்பு ஏணியை தனது மினி லாரியில் ஏற்றிக்கொண்டு டெலிவரி செய்வதற்காக திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் 8-வது தெருவில் வசிக்கும் குப்புசாமி (52) என்பவரது வீட்டுக்கு சென்றார்.
பின்னர் குப்புசாமி, சிவகுமார் இருவரும் சேர்ந்து இரும்பு ஏணியை வீட்டின் 2-வது மாடிக்கு கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் ஓரமாக சென்ற மின்சார வயரில் இரும்பு ஏணி உரசியது.
இதில் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த குப்புசாமி, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீத்தாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, பலியான சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றார். திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி சிவகுமார் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் சோழவரத்தை அடுத்த பெருங்காவூரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தை அடுத்த வடகரை பாபா நகரில் மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து மின்வாரிய ஊழியரான ரமேஷ், அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story