பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; சப்-இன்ஸ்பெக்டர் கைது தாயும், பெரியம்மாவும் சிக்கினர்
துப்பாக்கி முனையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தி்ல் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாய் மற்றும் பெரியம்மாவும் சிக்கினார்கள்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள இவர், மாதவரம் துணை கமிஷனரின் தனிப்படையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும், சென்னையை அடுத்த மணலி சின்னசேக்காடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான பெண் ஒருவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்தது.
அப்போது தனது கள்ளக்காதலியின் மகளான 15 வயதான 10-ம் வகுப்பு மாணவி மீது சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு மோகம் ஏற்பட்டது. அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், துப்பாக்கிமுனையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் தாயும், அவருடைய சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பாலியல் பலாத்கார சம்பவத்தை தந்தையிடம் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டினர். ஆனால் மாணவி, தனக்கு நடந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறி அழுதாள்.
அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story