லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை மாற்றி பதிவிட்ட ஊழியர்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை மாற்றி பதிவிட்டு ஊழியர் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 30), கார் டிரைவர். இவருக்கும், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த தீபலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபலட்சுமியை பிரசவத்திற்காக கடந்த மே மாதம் 29-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் ராஜவேல் அனுமதித்துள்ளார். அங்கு தீபலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு வேல்முருகன் என பெயர் சூட்டினர்.
தொடர்ந்து குழந்தையின் பிறப்பை பதிவு செய்த ராஜவேல், பிறப்பு பதிவு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். அதற்கு சான்றிதழ் வழங்க அங்கிருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு ராஜவேல் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மருத்துவமனை ஊழியர், ராஜவேலுவுக்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வழங்காமல் அவரை சில நாட்கள் அலைக்கழிப்பு செய்துள்ளார்.
தந்தை பெயர் மாற்றி பதிவு
அதன் பின்னர் நேற்று ராஜவேலுக்கு மருத்துவமனையில் இருந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை பார்த்ததும் ராஜவேலு அதிர்ச்சியடைந்தார். அதில் குழந்தையின் தந்தை பெயரில் ராஜவேல் என்பதற்கு பதிலாக ராஜசேகர் என்று மாற்றி பதிவு செய்து சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் முறையிட்டதற்கு சரிவர பதில் தெரிவிக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த ராஜவேல், இதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரை கொடுத்தார். அந்த மனுவில், நான் எனது மனைவி தீபலட்சுமியை பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவருக்கு பிரசவம் பார்க்க 500 ரூபாய் வரை கேட்டனர். நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். பின்னர் குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது அதற்கும் பணம் கேட்டனர். நான் தர மறுத்ததால் என்னை சில நாட்கள் அலைக்கழிப்பு செய்து வந்த நிலையில் தற்போது கொடுத்த சான்றிதழில் எனது பெயரை மாற்றி பதிவு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். நான் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயரை தெளிவாக தமிழில் எழுதி கொடுத்தபோதிலும் சான்றிதழுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்திற்காக வேண்டுமென்றே எனது பெயரை மாற்றி பதிவு செய்துள்ளனர். இது பழிவாங்கும் செயல். இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story