உத்தமபாளையத்தில் மோட்டார்சைக்கிளை திருடி செல்லும் மர்மநபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
உத்தமபாளையத்தில் மோட்டார்சைக்கிளை திருடி செல்லும் மர்மநபர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஞானம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பகவதி. இவர், கடந்த 24-ந்ேததி வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் மோட்டார்சைக்கிளை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதேபோல் அதேபகுதியை சேர்ந்த கார்த்திக்குமார், சரவணன் ஆகியோரின் மோட்டார்சைக்கிள்களும் திருட்டு போனது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மர்ம நபர்கள், அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோழிகளை திருடி சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், திருடு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பகவதியின் மோட்டார்சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த வீடியோ காட்சியை, அந்த பகுதி வாலிபர்கள் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story