காட்டுயானையின் உடல் நலனை ஆய்வு செய்ய குழு
மரக்கூண்டில் அடைக்கப்பட்ட காட்டுயானையின் உடல் நலனை ஆய்வு செய்ய குழு அமைத்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கூடலூர்
மரக்கூண்டில் அடைக்கப்பட்ட காட்டுயானையின் உடல் நலனை ஆய்வு செய்ய குழு அமைத்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
ரிவால்டோ யானை
நீலகிரி மாவட்டம் மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டுயானை சுற்றிவந்தது.
மேலும் அதற்கு சுவாச பிரச்சினை இருந்தது. எனவே அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க கோரிக்கை எழுந்தது. அதன்படி காட்டுயானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அது முடியவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த மாதம் 5-ந் தேதி வாழைத்தோட்டம் பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி பின்புறம் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் காட்டுயானையை பிடித்து வனத்துறையினர் அடைத்தனர். தொடர்ந்து காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
8 பேர் கொண்ட குழு
இதன் காரணமாக காட்டுயானையை மரக்கூண்டில் இருந்து விடுவித்து, மீண்டும் வனத்துக்குள் அனுப்புவதா? அல்லது முதுமலையில் உள்ள முகாமில் வைத்து பராமரிப்பதா? என உடல் நலனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பல்வேறு துறைகளை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் அமைத்து உள்ளார்.
இதில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் யானைகள் திட்ட கமிட்டி உறுப்பினர் டாக்டர் மனோகரன், உலக நிதியக ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், ஓசை அமைப்பு நிர்வாகி காளிதாஸ், ஊட்டி அரசு கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர், விஞ்ஞானி என 8 பேர் இடம் பெற்று உள்ளனர்.
நீதிமன்ற வழிகாட்டுதல்
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்ட குழு விரைவில் காட்டுயானையை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story