நாளை முதல் 275 பஸ்கள் இயக்கம்


நாளை முதல் 275 பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2021 10:37 PM IST (Updated: 26 Jun 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி பொது போக்குவரத்து தொடங்க உள்ளதையொட்டி நாளைமுதல் 275 பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி பொது போக்குவரத்து தொடங்க உள்ளதையொட்டி நாளைமுதல் 275 பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின்போது பொதுபோக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது போக்கு வரத்தை மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் பஸ் போக்குவரத்து நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. 
இதன்படி கும்பகோணம் கோட்டத்தின்கீழ் உள்ள காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, சாயல்குடி ஆகிய அரசு போக்குவரத்து கழக பணி மனைகளில் இருந்து நாளை முதல் பஸ் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
புறநகர் பஸ்கள்
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் 112 நகர் பஸ்கள், 163 புறநகர் பஸ்கள் என மொத்தம் 275 பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சிதம்பரம், தஞ்சை, கும்பகோணம், நாகை, கரூர், வேளாங்கன்னி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகள் தவிர கொரோனா தொற்று இல்லாத இதர பகுதிகளுக்கும் ராமநாதபுரத்தில் இருந்து புறநகர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மாவட்டத்திற்குள் இயக்கப்படும் நகர பஸ்கள் வழக்கம்போல அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளன. பொது போக்குவரத்து தடை நீங்கியதால் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்கள் அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 
மேலும், அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப் பட்டு இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. மேலும், 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அதன் செயல்திறனை உறுதி செய்து சிறு சிறு பழுதுகளை நீக்கி தயார் படுத்தி வருகின்றனர். 
முககவசம் கட்டாயம்
பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் அனைத்து பஸ்களிலும் முககவசம் அணிந்தபடி பயணிகள் ஏறி செல்வதை உறுதி செய்யுமாறு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story