3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்


3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 12:03 AM IST (Updated: 27 Jun 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,
3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார்கள். 

புதிய வேளாண் சட்டங்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்தநிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று காலை மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்தனர். இதில் மாவட்ட தலைவர் மேகராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் போராட்டம்

கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, விவசாயிகளை உள்ளே அனுமதிக்காமல் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் மறித்தனர். இதனால் விவசாயிகள் தரையில் படுத்து வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

கலெக்டர் வரும்வரை அங்கேயே போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

மயங்கி விழுந்ததால் பரபரப்பு

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை அழைத்து வந்து நிழலில் அமர வைத்தனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு வந்த மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story