பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது
சேலத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை நேற்று ரூ.100-ஐ தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம்
சேலத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை நேற்று ரூ.100-ஐ தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் விலை
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-ஐ கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.69-ஆக இருந்தது. இது நேற்று 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ எட்டியது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.04 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்ட வரலாற்றிலேயே இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
இந்த மாதத்தை பொறுத்தவரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை சுமார் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் 26-ந் தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டில் லிட்டருக்கு ரூ.15 உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் பெட்ரோல் விலை உயர்வை கேட்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story