போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
ேசலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை ‘பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
ேசலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை ‘பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாலிபருக்கு அபராதம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்வதுடன் கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் செல்வோர் மீதும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவருக்கு முக கவசம் அணியாததால் போலீசார் ரூ.200 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
போலீசாருக்கு மிரட்டல்
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த நபரின் நண்பரும், சூரமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளருமான செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கொண்டு கொண்டலாம்பட்டி பகுதிக்கு நேரில் வந்துள்ளனர். பின்னர் செல்லபாண்டியன் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போயிடனும். தேவையில்லாமல் வழக்கு போடக்கூடாது. பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன். வாகன சோதனையில் கொரோனா பரவலை தடுத்து விட முடியுமா? அபராதம் விதித்த பணத்தை திரும்பப் பெறாமல் சும்மா விடமாட்டேன் என்று கூறிய செல்லபாண்டியன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போலீசாருடன் இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி அங்கிருந்த நபர் ஒருவரால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
4 பிரிவுகளில் வழக்கு
இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்லியம் ஜேம்ஸ் புகார் அளித்தார். இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகி செல்லபாண்டியன் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது செல்லபாண்டியன் தலைமறைவாகி விட்டதால் அவரையும், அவருடன் வந்த தமிழரசன் என்பவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story