சேந்தமங்கலத்தில் கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல் போலீசார் விசாரணை
சேந்தமங்கலத்தில் கட்டிட மேஸ்திரி மீது தாக்குதல் போலீசார் விசாரணை
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30) கட்டிட மேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு அரிசி வாங்கி கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சேந்தமங்கலம் அருந்ததியர் காலனிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான விக்னேஷ் (27) என்பவரும் மோட்டார்சைக்கிளில் வந்தார். அந்தசமயம் 2 மோட்டார்சைக்கிள்களும் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால் பிரகாசுக்கும், விக்னேசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின்போது பிரகாஷ், விக்னேசை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரும் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் மோதி கொண்டதால் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதனால் சேந்தமங்கலத்தில் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் நேற்று சேந்தமங்கலம் வந்து நேரடி விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story