ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்


ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:24 AM IST (Updated: 27 Jun 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

பர்கூர்:

ஆக்சிஜன் உற்பத்தி கருவி
பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி ஆக்சிஜன் உற்பத்தி கருவி மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். செல்லக்குமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்தும் வகையில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 13 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டம்
தற்போது ஜெகதேவி ஊராட்சி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி மற்றும் 62.5 கிலோவாட் மின்சார உற்பத்தி ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவி 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் உற்பத்தித்திறன் கொண்டது. தற்போது 20 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் பைப்லைன் மூலம் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
மேலும், கூடுதலாக 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story