வடமதுரை அருகே தார் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


வடமதுரை அருகே தார் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 Jun 2021 1:29 AM IST (Updated: 27 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே சாலை அமைக்கும் பணியின்போது தார் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குப்பமுத்துபட்டியில் இருந்து அதிகாரிபட்டிக்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த காளியப்பன் (வயது 41) என்பவர் தார் கலவை எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. காளியப்பனும், திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்த சின்னத்துரை (43) என்பவரும் தார் கலவை எந்திரத்தை இயக்கி கொண்டிருந்தனர். 
தார் மற்றும் ஜல்லிகற்களை கலந்து கொண்டிருக்கும்போது, எந்திரத்தில் திடீரென்று தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த காளியப்பனும், சின்னத்துரையும் தார் கலவை எந்திரத்தில் இருந்து வெளியே தாவி குதித்தனர். ஆனால் காளியப்பன் தவறி கலவை எந்திரத்திற்குள் விழுந்து, சிக்கி கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். 
சின்னத்துரை எந்திரத்திற்கு வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story