பெங்களூருவில் முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை: தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது
பெங்களூருவில் முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
ரேகா கொலை
பெங்களூரு மாநகராட்சி செலுவாதிபாளையா வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா, பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் கதிரேஷ். இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். பெங்களூரு காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியில் ரேகாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய வார்டில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் ரேகா உணவுகளை வழங்கி வந்தார்.
அதுபோல், கடந்த 24-ந் தேதி காலையில் உணவு வழங்கிவிட்டு வீட்டுக்கு சென்ற ரேகாவை பீட்டர் மற்றும் சூர்யா ஆகிய 2 பேரும் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தனர். அதாவது ரேகாவின் உடலில் 17 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
பின்னர் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த கொலையாளிகளான பீட்டர் மற்றும் சூர்யாவை காமாட்சி பாளையா அருகே சுங்கதகட்டேயில் வைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்திருந்தனர். அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பீட்டர், ரேகாவின் வீட்டின் அருகே வசித்து வந்ததுடன், அவரிடமே மாநகராட்சி சம்பந்தப்பட்ட சிறிய டெண்டர் பணிகளை எடுத்து செய்து வந்திருந்தார்.
கைதான 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் காட்டன் பேட்டையை சேர்ந்த மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, பீட்டரின் கூட்டாளிகளான ஸ்டீபன், அஜய் மற்றும் புருஷோத்தம் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டன்பேட்டை போலீசார் கைது செய்திருந்தார்கள்.
14 நாட்கள் போலீஸ் காவல்
கைதான 3 பேரையும் நேற்று மாலையில் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 3 பேரிடமும், ரேகா கொலை குறித்து விசாரிக்க 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கும்படி நீதிபதியிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஸ்டீபன், புருஷோத்தம், அஜய் ஆகிய 3 பேரையும் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு, நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களில் ரேகாவை கொலை செய்ய பீட்டருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஸ்டீபன் தான் செய்து கொடுத்தது தெரியவந்தது. அதாவது ரேகாவின் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் எந்த காட்சிகளும் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக, முதலில் ஸ்டீபன் தான் அந்த கேமராவை மேல் பக்கமாக திருப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரேகாவை பீட்டரும், சூர்யாவும் கத்தியால் குத்திக் கொலை செய்த போது, மற்றவர்கள் யாரும் தடுக்க வந்து விடக்கூடாது என்பதற்காக ஸ்டீபன், அஜய், புருஷோத்தம் சுற்றி நின்றதும் தெரிந்தது.
பணப்பிரச்சினை
இதுதொடர்பாக நேற்று முன்தினம் வெளியான வீடியோ காட்சிகளில் 3 பேரும் சுற்றி நிற்கும் காட்சிகளும் தெளிவாகி பதிவாகி இருந்தது. அத்துடன் ரேகாவின் கணவர் கதிரேசை கடந்த 2018-ம் ஆண்டு சோபன், அவரது கூட்டாளிகள் கொலை செய்திருந்தனர். பின்னர் சோபனும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பீட்டர், புருஷோத்தம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. கதிரேஷ் கொலையான பின்பு, பீட்டர், ஸ்டீபன் உள்ளிட்டோர் ரேகாவுடன் தான் இருந்துள்ளனர்.
ஆனால் பீட்டருக்கும், ரேகாவுக்கும் மாநகராட்சி டெண்டர் பணிகளை ஒதுக்குவது, ரூ.18 லட்சம் பணிகளை செய்ததற்காக, அதற்கான பில் தொகை கொடுக்காமல் ரேகா வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும், கதிரேசை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக ரேகா சில உதவிகளை செய்ததாகவும், இதன் காரணமாக பீட்டர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பின்னணியில் யார்?
அதே நேரத்தில் மாநகராட்சி தேர்தல் விவகாரம், ரேகாவின் குடும்ப விவகாரம் காரணமாகவும் கொலை நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ரேகாவின் கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக ரேகாவை கொலை செய்ய பீட்டர் உள்ளிட்டோரை சிலர் தூண்டி விட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொலைக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உறவுக்கார பெண்களிடம் விசாரணை
மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா கொலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. ரேகா கொலைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், மாநகராட்சி தேர்தல் விவகாரம் ஒரு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு(2022) நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் செலுவாதி பாளையா வார்டில் ரேகாவே, பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்ததாக தெரிகிறது.
ஆனால் மாநகராட்சி தேர்தலில் கதிரேசின் சகோதரி மாலா தனது மகளை நிறுத்த முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த கொலையில் மாலா, அவரது மகன், மகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, மாலா, அவரது மகன் அருள், மருமகள் பூர்ணிமாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story