இரட்டை கொலையில் 2 பேர் கைது
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். கும்பலாக சேர்ந்து மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள். கும்பலாக சேர்ந்து மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
இரட்டை கொலை
கன்னியாகுமரி முருகன் குன்றம் 4 வழிச்சாலை அருகே சுவாமிநாத புரத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் (வயது 24) என்பவரும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த செல்வின் (24) என்பவரும் கடந்த 24-ந் தேதி அன்று கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.
மேலும் சுனாமி காலனியை சேர்ந்த மோகன் மகன் சகாய ஷாஜி ஜெனிஸ் (26) என்பவர் கத்திக்குத்து காயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த இரட்டைக்கொலை சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 பேருக்கு தொடர்பு
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதலில் கத்திக்குத்து காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜெனிசுக்கும், கொலையான 2 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்த இரட்டை கொலை நடந்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகப்பட்டது. இந்தநிலையில் ஜெனிஸிடம் விசாரணை நடத்தியபோது, மது மற்றும் கஞ்சாவையும் உபயோகித்த போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் கொண்ட மற்றொரு கும்பலால் தாங்கள் தாக்கப்பட்டதும், இதில் ஜேசுராஜ், செல்வின் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
ஜெனிஸ் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இரட்டை கொலையில் தொடர்புடையவர்கள் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பக்கீஸ்வரன் (21), முத்து என்ற முத்துகுமார் (22), ராஜேஷ் என்ற பில்லா ராஜேஷ் (26) ஆகிய 3 பேரும் என்ற தகவல் வெளியானது.
2 பேர் கைது
3 பேரையும் தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒரு தோப்புக்குள் பதுங்கியிருந்த பக்கீஸ்வரன், முத்து ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். ராஜேஷ் என்ற பில்லா ராஜேஷ் மட்டும் தலைமறைவாகி விட்டார்.
பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்து, இரட்டை கொலையை செய்தது ஏன்? என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
பரபரப்பு தகவல்
இந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
சம்பவத்தன்று கொலையான 2 பேர் மற்றும் ஜெனிஸ் ஆகியோர் சேர்ந்து ஒரு கும்பலாகவும், கைது செய்யப்பட்ட பக்கீஸ்வரன், முத்துக்குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு கும்பலாகவும் மது அருந்தி உள்ளனர். மது போதைக்கு இடையே கஞ்சாவையும் பிடித்ததால் நிதானமின்றி இருந்துள்ளனர்.
இதில் முதலில் ஜெனிஸ் மதுவை சீக்கிரமாக குடித்துள்ளார். இதனால் அருகில் மது அருந்தி கொண்டிருந்த பக்கீஸ்வரன் உள்ளிட்டோரிடம் தனக்கு மதுபாட்டில் வாங்கி வா என்று கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
கத்தியால் குத்தினர்
அப்போது பக்கீஸ்வரன் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெனிஸ் அந்த கத்தியை எடுக்க முயன்றதாகவும், அதற்குள் பக்கீஸ்வரனும், அவருடன் இருந்தவர்களும் அந்த கத்தியை எடுத்து ஜெனிசை குத்தியதாக தெரிகிறது. கத்திக்குத்தில் காயமடைந்த ஜெனிஸ் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை ஜெனிசுடன் இருந்த ஜேசுராஜ், செல்வின் ஆகிய 2 பேரும் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், அவர்கள் 2 பேரையும் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். கத்திக்குத்து காயத்துடன் தப்பிய ஜெனிஸ் மட்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் அவர் உயிர் பிழைத்து விட்டார் என போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரி படிப்பை நிறுத்தியவர்கள்
மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற பில்லா ராஜேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஜெனிஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story