நகைக்கடை அதிபர் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ரோசன் பெய்க் சொத்துக்களை ஜப்தி செய்யும் பணி தொடக்கம் - கர்நாடக ஐகோர்ட்டில், அரசு அறிக்கை தாக்கல்
நகைக்கடை அதிபர் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கின் சொத்துக்களை ஜப்தி செய்யும் பணி தொடங்கி இருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டில், அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு:
அரசுக்கு நோட்டீசு
பெங்களூரு சிவாஜிநகர் உள்பட பல பகுதிகளில் நகைக்கடைகள் நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர், நகை சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.2 ஆயிரம் கோடி வரை மோசடி செய்திருந்தார். இவ்வாறு மோசடி செய்த பணத்தை மன்சூர்கானிடம் இருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் மன்சூர்கானிடம் இருந்து முன்னாள் மந்திரி ரோசன் பெய்க் பல கோடி ரூபாய் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரோசன் பெய்க் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்திருந்தார்கள். இதையடுத்து, மன்சூர்கானிடம் இருந்து ரோசன் பெய்க் வாங்கிய பணத்திற்காக, அவரது சொத்துக்களை ஜப்தி செய்ய ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அந்த பணிகளை அரசு மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதற்காக, கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தது.
ஜப்தி செய்யும் பணி தொடக்கம்
இந்த நிலையில், நகைக்கடை அதிபர் மன்சூர்கான் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை கா்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், ஐகோர்ட்டில் ஒரு அறிக்கையும் தாக்கல் செய்திருந்தார். அதில், ரோசன் பெய்க்கின் சொத்துக்களை ஜப்தி செய்யும் பணிகளை அரசு எடுத்து வருவதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரோசன் பெயக்கின் சொத்து குறித்த தகவல்களை தெரிவிக்க பெங்களூரு மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தகவல் அளித்ததும் ரோசன் பெய்க்கின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று அட்வகேட் ஜெனரல், கர்நாடக ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரசு பள்ளிகளுக்கு மன்சூர்கான் அளித்த ரூ.10 கோடியை திரும்ப பெற முடியாது என்றும் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story