கொரோனா பரவல் நேரத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரசை கண்டித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கொரோனா பரவல் நேரத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரசை கண்டித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:42 AM IST (Updated: 27 Jun 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் நேரத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரசை கண்டித்து பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசிடம் மோதல் போக்குடன் நடந்து வரும் மேற்கு வங்காள அரசு மீது நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெங்களூரு:

முக்கிய தீர்மானங்கள்

  கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்பட குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், மாநில துணைத்தலைவர் விஜயேந்திரா உள்பட குழுவின் உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த எங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் பி.பி.எல். குடும்பங்களுக்கு தலா ரு.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உரிய நடவடிக்கை

  மேற்கு வங்காள மாநிலத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள், கவர்னருடன் அங்குள்ள அரசு நடந்துகொள்ளும் விதம், மத்திய அரசுடன் அந்த மாநில அரசு மோதல் போக்குடன் செயல்பட்டு வருவதை கண்டித்தும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வும் காணொலி மூலம் கலந்து கொண்டார். கர்நாடக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரிதும் கஷ்டப்பட்டனர்.

அரசுக்கு எதிராக கருத்துகள்

  அந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், காங்கிரஸ் கட்சி அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது. சித்தராமையா, தான் தேர்ந்து எடுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று மக்கள் பணி ஆற்றாமல், வீட்டில் அமர்ந்தபடி டுவிட்டரில் அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டார். அதனால் காங்கிரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இவ்வாறு கணேஷ் கார்னிக் கூறினார்.

Next Story