குமரியில் 15 இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி குமரியில் 15 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி குமரியில் 15 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தொழிலாளர் தொகுப்பு சட்டம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கொரோனா தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும், தனியாருக்கு வழங்கக்கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 மற்றும் நபர் ஒருவருக்கு உணவு தானியம் 10 கிலோ வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் அந்தோணி தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன் சிறப்புரையற்றினார், எல்.பி.எப். மாநில துணைச் செயலாளர் இளங்கோ, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்டச் செயலாளர் அய்யப்பன், மாநில குழு உறுப்பினர் வாகையடி அய்யப்பன், எச்.எம்.எஸ். மாவட்ட தலைவர் லட்சுமண், ஏ.ஐ.சி.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜு, ஐ.என்.டியூ.சி. மாநகர தலைவர் வடலி மகாலிங்கம், எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பங்கேற்றவர்கள் அவரவர் தொழிற்சங்கக் கொடிகளை கைகளில் ஏந்தி கலந்து கொண்டனர்.
தக்கலை
தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் கோலப்பன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன்சைலஸ், சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் சந்திரகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், அகில இந்திய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈத்தாமொழி, சுங்கான்கடை, முட்டைகாடு, திருவட்டார், குலசேகரம், கடையாலுமூடு, மஞ்சாலுமூடு, மேல்புறம், குழித்துறை, கொல்லங்கோடு, அடைக்காகுழி, காஞ்சாம்புறம், கருங்கல் ஆகிய இடங்களிலும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரியில் மொத்தம் 15 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story