‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பரவலை தடுக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவு
‘டெல்டா பிளஸ்’ வைரஸ் பரவலை தடுக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கருப்பு பூஞ்சை நோய்
கடந்த மே மாதம் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இதனால் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது. மேலும் வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 500-க்கும் மேல் பதிவானது. இதன்காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளாலும் மாநிலத்தில் வைரஸ் பரவல் குறைந்துள்ளது. தற்போது மாநிலத்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரையில் மாநிலத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். இன்னும் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெல்டா பிளஸ் வைரஸ்
இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் தற்போது, கொரோனா வைரசில் உருமாற்றம் அடைந்து ‘டெல்டா’ வைரசாக உருவெடுத்து தற்போது அது தீவிரம் அடைந்து ‘டெல்டா பிளஸ்’ வைரசாக மாறி மக்களிடையே பரவி வருகிறது. இதுவரை கர்நாடகத்தில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் மைசூருவிலும், மற்றொருவர் பெங்களூருவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில எல்லைகளிலும், மாவட்ட எல்லைகளிலும் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டார்.
தலைமை செயலாளருக்கு கடிதம்
குறிப்பாக மராட்டியம் மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும், மேலும் அவர்கள் வீட்டு தனிமையில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும், அவர்கள் கர்நாடகத்துக்குள் வந்த பிறகு மீண்டும் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் எனபன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாவட்டந்தோறும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அலட்சியமாக இருக்க கூடாது
கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை பெங்களூருவில் ஒருவருக்கும், மைசூருவில் ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. 2 பேருக்கு மட்டும்தான் பரவி இருக்கிறது என்று மாநில அரசு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. இந்த வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணியையும் அதிகரிக்க வேண்டும். டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பெங்களூரு, மைசூரு மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார துறையினர் கண்காணிக்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நேரடியாகவும், தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுங்கள்.
போர்க்கால அடிப்படையில்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், அதுபற்றி ஆராய்ச்சி செய்யவும் அமைக்கப்பட்டுள்ள இந்திய கொரோனா தடுப்பு கூட்டமைப்பு(இன்சகோக்) சார்பில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் தொற்று நோயியல் ஆய்வகங்களுக்கு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் ரத்தம், சளி மாதிரிகளை உடனடியாக அனுப்புங்கள்.
இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது. மேலும் மனிதனின் நுரையீரலை தாக்கும். இதனால் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகம்...
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, உப்பள்ளி, மங்களூரு, விஜயாப்புரா உள்ளிட்ட இடங்களில் மரபணு பரிசோதனை மையங்கள் அமைக்கபட உள்ளது.
கர்நாடகத்துக்கு அனுப்பப்பட்டது போல், மத்திய அரசு சார்பில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தமிழகம், கேரளா, மராட்டியம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story