திருவள்ளூர் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்; 4 பேர் கைது
திருவள்ளூர் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருமணி குப்பம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், லோகநாதன் உள்ளிட்ட 8 பேர் ஏன் இந்த வழியாக சாமி ஊர்வலம் வருகிறது எனக் கூறி தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தில் உடன் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார் (வயது 25) என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதைக்கண்டு தடுக்க வந்த சதீஷ்குமாரின் நண்பர்களையும் மேற்கண்ட நபர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பதிலுக்கு சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்களான தேவராஜ் (22), லட்சுமணன், அஜித்குமார், விஜய், அஜய், வெங்கடேசன், கோடீஸ்வரன், நவீன், முருகன், பாலாஜி, கிஷோர் (19) என 31 பேர் கொண்ட கும்பல் ஆனஸ்ட்ராஜ் தரப்பினரை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர். இரு தரப்பையும் சேர்ந்த மேற்கண்ட 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களில் திருமலை (19) தேவராஜ், (22) சதீஷ்குமார் (25), கிஷோர் (19) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story