கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே மேம்பாலத்தில் இருந்து குதித்து பேக்கரி மாஸ்டர் தற்கொலை வேலை கிடைக்காததால் விரக்தி


கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே மேம்பாலத்தில் இருந்து குதித்து பேக்கரி மாஸ்டர் தற்கொலை வேலை கிடைக்காததால் விரக்தி
x
தினத்தந்தி 27 Jun 2021 11:17 AM IST (Updated: 27 Jun 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காத விரக்தியில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பேக்கரி மாஸ்டர் தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி, 

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே, 100 அடி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த மேம்பாலத்தின் மீது ஏறிய ஆண் ஒருவர் திடீரென, ‘நான் சாகப்போகிறேன்’ என்று கூறியபடி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு போராடினார். இந்த காட்சியை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேல் ஏறி, கீழே செல்லும் வாகனங்களை நோட்டமிடும் அவர், வாகனங்கள் அனைத்தும் சென்றதும், ரோடு காலியாக இருக்கும் நேரத்தில் கீழே குதிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட அவர் யார்? என விசாரித்தனர்.

விசாரணையில் தற்கொலை செய்த நபர் திருப்பத்தூரைச் சேர்ந்த செந்தில் (வயது 36) என்பது தெரிந்தது. பேக்கரி மாஸ்டரான அவர், சென்னையில் வேலை தேடி வந்துள்ளார்.

ஆனால் இங்கு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story