போடி அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு தனியார் கல்குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்


போடி அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு தனியார் கல்குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 5:45 PM IST (Updated: 27 Jun 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டனர்.

போடி :
போடி அடுத்த மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள மலைக்குன்று அருகில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த மலைக்குன்று வழியாக இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்து செல்லும் பாதை உள்ளது. 
இந்தநிலையில் தனியார் கல்குவாரி நிர்வாகத்தினர் குவாரியை விரிவு படுத்தும் போது இந்த மயான பாதையையும் சேர்த்து ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படு கிறது. 
முற்றுகை போராட்டம்
இது கரட்டுப்பட்டி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் மயான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரும்படி போடி தாசில்தாருக்கு புகார் மனு கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பாக  போடி தாசில்தார் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story