பொதுமக்களிடம் போலீசார் கனிவாகவும், மரியாதையாகவும் நடக்க வேண்டும்-சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி அறிவுரை
பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையாகவும் நடக்க வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ணகிரி உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பேசியதாவது:-
போலீசார் பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் தயங்காமல் எடுக்க வேண்டும். போலீசார், தேவையின்றி பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது. பொதுமக்களிடம் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
இரவில் ரோந்து கஞ்சா, குட்கா, லாட்டரி, விபசாரம், சூதாட்டம் போன்ற சட்டத்திற்கு எதிரான சம்பவங்களை போலீசார் தடுக்க வேண்டும். இது குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும், எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். போலீசார் இரவில் ரோந்து செல்ல வேண்டும். பொது இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானம், கோவில்கள் போன்ற இடங்களில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்கள் நடந்து முடிந்த பின்னர் கண்டுபிடிப்பதைவிட, குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் புகார்களை பெற்றுக் கொண்டதற்கான சான்று (சி.எஸ்.ஆர்.) அல்லது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய வேண்டும். வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் கூடாது.
நேர்மை, கண்ணியம்
தாமதமாகும் போது பிரச்சினைகளும் பெரிதாக மாறும். எனவே பொதுமக்கள் புகார்களின் மீது உடனே வழக்குப்பதிவு செய்து ரசீது வழங்க வேண்டும். மாநில அளவிலான பிரச்சினைக்கு என்னை தொடர்பு கொண்டு பின்னர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிலம் தொடர்பான புகார்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும். போலீசாருக்கு வாரம் ஒரு முறை, ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனக்கு புகார்கள் வரக்கூடாது. போலீசார் நேர்மையாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 220 போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி, கந்திகுப்பம், பர்கூர் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் பர்கூரில் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலந்து கொண்டு பேசினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story