தி.மு.க. ஆட்சியையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது
தி.மு.க. ஆட்சியையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
நத்தம்:
நத்தத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் அலுவலக வளாகத்தில் குத்துவிளக்கையும் ஏற்றி வைத்தார்.
விழாவில் நத்தம் ஒன்றியகுழு தலைவர் கண்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சின்னு, மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட பேரவை செயலாளர் ஜெயபாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழில் அதிபர் அமர்நாத் வரவேற்றார். இதில் மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அசாருதீன், நகர அவைதலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சின்னாகவுண்டர், மாவட்ட பிரதிநிதி மோகன் பாபு மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராமு நன்றி கூறினார்.
விழா முடிவி்ல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியையும், மின்வெட்டையும் பிரிக்க முடியாது. சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும், மின்வெட்டை சரிசெய்ய முடியாமலும் மின்சாரத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story