ஊரடங்கில் தளர்வு: குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் இன்று முதல் இயக்கம்


ஊரடங்கில் தளர்வு: குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் இன்று முதல் இயக்கம்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:16 PM IST (Updated: 27 Jun 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று சங்க நிர்வாகி தெரிவித்தார்.

கடலூர், ஜூன்.

தமிழகத்தில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி தேதி வரை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில் வகை 2,3-ல் உள்ள கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பஸ் போக்குவரத்தை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளவும், குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

கிருமி நாசினி தெளிப்பு

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 11 அரசு பணிமனைகளிலும் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், பழுதுகளை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் தனியார் பஸ்களை இயக்கவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களை மட்டும் இயக்குவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ்கள்

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், தமிழக அரசு வழிகாட்டு நெறி முறைகளை பயன்படுத்தி பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளது. 

ஆனால் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் டீசல் போடுவதற்கும், டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் முடியாமல் நஷ்டம் ஏற்படும். 

இருப்பினும் மாவட்டத்தில் உள்ள 235 தனியார் பஸ்களில் 70 முதல் 80 பஸ்களை மட்டும் முதற்கட்டமாக இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த வாரம் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முழுமையாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்போம். 

அதுவரை பயணிகளின் வருகைக்கு ஏற்ப குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

Next Story