இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய், கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய், கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jun 2021 10:46 PM IST (Updated: 27 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய், சுறா மீனின் இறக்கை மற்றும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 5 பேரை கடலோர போலீசார் கைது செய்தனர்.

கீழக்கரை, 
இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய், சுறா மீனின் இறக்கை மற்றும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 5 பேரை கடலோர போலீசார் கைது செய்தனர்.
தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடி- ராமநாதபுரத்துக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் வாகனத்தில் சில பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி கடலோர போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ராமநாதபுரம் கடலோர போலீசார் கீழக்கரை அருகே உள்ள ஒரு குடோன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் 15 மூடைகளில் தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் உடலில் உள்ள சுறா இறக்கை 450 கிலோ, மற்றும் 5 மூடைகளில் 250 கிலோ ஏலக்காய், சுமார் 55 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. இதையடுத்து கடலோர போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த காசிம் முகமது (வயது 50), முகமது மீரா சாகிப், சாகப்தின் சாகிப், மண்டபம் சேது நகரை சேர்ந்த இம்ரான் உசேன், சேதுக்கரை புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அகமது உசேன் ஆகிய 5 பேரையும் கைது செய்து கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
மருத்துவ குணம்
சுறா மீனின் இறக்கை, ஏலக்காய் மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் இருந்து வாகனத்தில் ஏற்றி கீழக்கரையில் உள்ள குடோனுக்கு கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. மேலும் ஏலக்காய், சுறாமீனின் இறக்கை ஆகியவை மருத்துவ குணம் கொண்டதால் மருந்து பொருட்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படும். இந்த 3 பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story