இரட்டை கொலையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலையில் பிரபல கஞ்சா வியாபாரியையும் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலையில் பிரபல கஞ்சா வியாபாரியையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இரட்டை கொலை
கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியை சோ்ந்தவர் ஜேசுராஜ் (வயது 24). இவரும், வடக்கு குண்டலை சேர்ந்த செல்வின் (24) என்பவரும் முருகன்குன்றத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுனாமிகாலனியை சேர்ந்த சகாயஷாஜி ஜெனிஸ் (26) என்பவர் படுகாயம் அடைந்தார். இது ெதாடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு இடங்களில் கொலையாளிகளை தேடி வந்தனர். சிகிச்சை பெற்று வரும் சகாயஷாஜி ெஜனிசிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடைய அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த பக்கீஸ்வரன் (21), முத்து என்ற முத்துக்குமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயிலில் அடைப்பு
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜேசுராஜ், செல்வின், சகாயஷாஜி ஜெனிஸ் மற்றும் பக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் கூட்டாக சேர்ந்து மது மற்றும் கஞ்சா பிடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது ஆத்திரம் அடைந்த பக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் சேர்ந்து முதலில் சகாயஷாஜி ஜெனிசை கத்தியால் குத்தியுள்ளனர். அதன்பிறகு செல்வினையும், ஜேசுராஜையும் அடுத்தடுத்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ேமலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜேஷ் என்ற பில்லா ராஜேசுக்கும் (27) தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே ராஜேஷ் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு அகஸ்தீஸ்வரம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
கஞ்சா வியாபாரியும் சிக்கினார்
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பக்கீஸ்வரன் மற்றும் முத்துக்குமார் மூலமாக கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும் கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டு கத்தி குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற 2 பேருக்கும் ராஜேஷ் அடைக்கலம் கொடுத்துள்ள தகவலும் வெளியானது.
இதனையடுத்து ராஜேசையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Related Tags :
Next Story