தடுப்பூசி செலுத்த இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த இருப்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த இருப்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வப்போது வரும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி முதற்கட்ட தடுப்பூசியை 2 லட்சத்து 75 ஆயிரத்து 164 ேபர் போட்டுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 55 ஆயிரத்து 39 பேர் போட்டு இருக்கிறார்கள். முதல் மற்றும் 2-ம் தடுப்பூசியை மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 203 பேர் செலுத்தி உள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் முதற்கட்ட தடுப்பூசியை 8 ஆயிரத்து 757 பேரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 1,123 ேபரும் என மொத்தம் 9 ஆயிரத்து 880 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் நேற்று முன்தினம் காலை 10 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் குமரி மாவட்டத்துக்கு வந்தன.
ஆன்லைன் மூலம் முன்பதிவு
இதைத் தொடர்ந்து புதிதாக வந்த தடுப்பூசிகள் நேற்று 18 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. அதாவது செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பூதப்பாண்டி அரசு மருத்துவமனை, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி, ராஜாக்கமங்கலம், முட்டம், ஆறுதேசம், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் மற்றும் கிள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், குளச்சல், குழித்துறை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் மற்றும் சேனம்விளை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. இங்கு பொதுமக்களுக்கு முதலில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி ெசலுத்த ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார். தடுப்பூசி முகாம்களில் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3 இடங்களில் முகாம்
அதாவது பொதுமக்கள் bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது டோக்கனை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான லிங்க் kumaricovidcare.in என்ற இணையதளத்திலும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த இணையதளத்தில் bookmyvaccine என்ற பட்டனை அழுத்தி தங்கள் டோக்கனைப் பதிவு செய்து கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் டோக்கனைப் பதிவு செய்து எடுத்துக்கொள்ளலாம். இந்த டோக்கன் பதிவு நடைமுறை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு மட்டும் பொருந்தும். அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இந்த நடைமுறை தேவையில்லை. அங்கு எப்போதும் போல பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் 2-ம் டோஸ் 3 இடங்களில் போடப்பட உள்ளது. அதாவது டதி பள்ளி, அலோசியஸ் பள்ளி மற்றும் இந்து கல்லூரி ஆகிய 3 இடங்களில் போடப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
Related Tags :
Next Story