கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசார் ரோந்து
கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, கோபு, போலீசார் சுந்தரேசன், பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒரு டன் அரிசி பறிமுதல்
அவர்கள் கோவையை அடுத்த குனியமுத்தூர் முல்லை நகர் 2-வது வீதி அருகே அதிகாலை 5 மணிக்கு வந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு ஆட்டோ நின்றது.
அங்கு மொபட்டில் வந்த ஒருவர் அதில் இருந்த மூட்டைகளை அந்த சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் அங்கு வந்ததை பார்த்த அந்த நபர், திடீரென்று அங்கிருந்து தப்பி ஓடினார்.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த சரக்கு ஆட்டோவுக்குள் மூட்டை மூட்டையாக ஒரு டன் அளவுக்கு ரேஷன் அரிசி இருந்தது. உடனே போலீசார் அந்த அரிசி, மொபட் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.
தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
அதில் உக்கடத்தை சேர்ந்த அபித்ரகுமான் (வயது 40) என்பவர் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றியது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அபித்ரகுமான் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைதாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், தற்போது விடுதலை யான பின்னர் தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வருவதும் தெரிய வந்தது.
எனவே தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story