விவசாயி இறந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்ட நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.


விவசாயி இறந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்ட நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
x
தினத்தந்தி 28 Jun 2021 12:05 AM IST (Updated: 28 Jun 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி இறந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்ட நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

பல்லடம், 
வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாததால் விவசாயி இறந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்ட நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.இதையடுத்து இன்று வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளன. 
விவசாயி
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் குள்ளம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 53) சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். இவருடைய வங்கி கணக்கில் ரூ. 1½ லட்சம் இருப்பு உள்ளது. இதே வங்கியில் கனகராஜின் தந்தை ரங்கசாமி கடந்த 2014-ம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றுள்ளார். அதற்கு கனகராஜ் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
 இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ரங்கசாமி இறந்துவிட்டதால் வங்கியில் பெற்ற பயிர்கடன் கட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கனகராஜிக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளார். விவசாயத்திலும் போதுமான வருமானம் இல்லாததால், மருத்துவ செலவிற்காக தனது சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
 அதிகாரி மறுப்பு
 அப்போது கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது என காசாளர் கூறியதால், வங்கியின் மேலாளரை சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார் அவர் உங்கள் தந்தை வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு உள்ளீர்கள். அந்தக் கடன் நிலுவையில் உள்ளதால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதை எடுத்துக்கூறி  நலமடைந்து வந்து வங்கிக் கடனை கட்டுவேன் எனக்கூறியும் வங்கி மேலாளர் மறுத்துவிட்டார். இதற்கிடையே கனகராஜின் உடல்நிலை மோசமானதை அடுத்து அருகிலுள்ள உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆர்ப்பாட்டம் 
இதையடுத்து சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்க, தடையாக இருந்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும், என்பதை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் கேத்தனூரில் உள்ள  வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவித்து இருந்தது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் நேற்றுமாலை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில் இறந்துபோன விவசாயியின் உறவினர்கள், மற்றும் விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் தாசில்தார் தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், பாரத ஸ்டேட் வங்கி கோவை மண்டல மேலாளர் புவனேஸ்வரி, மற்றும்  வங்கி அதிகாரிகள் மோசஸ் ராஜ், மேரி சைலஜா, பரமேஸ்வரன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பல்லடம் ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர செயலாளர் தங்கவேல், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பில் இறந்த விவசாயி கனகராஜ் மற்றும் அவரது தந்தை வாங்கிய ரங்கசாமியின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் தடுத்த வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
 நடவடிக்கை
இதற்கு ரங்கசாமி வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இழப்பீடு வழங்க வங்கியின் சட்டத்தில் இடமில்லை என வங்கி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது. விவசாயிகள் தரப்பில் இழப்பீட்டு தொகை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது ஆனால் வங்கித் தரப்பில் இழப்பீடு தர ஒப்புக்கொள்ளாததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
 இந்த பிரச்சினை குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறியதாவது:-
 வங்கி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இறந்த விவசாயிக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல வங்கி மேலாளர் மீது துறைரீதியான நடவடிக்கை என இடமாற்றம் மட்டும் செய்தால் போதாது, காவல்துறை மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நாளை (இன்று) கேத்தனூர் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Next Story