இன்று முதல் 70 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது
ஜெயங்கொண்டத்தில் இருந்து இன்று முதல் 70 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஜெயங்கொண்டம்,
தமிழக அரசு ஊரடங்கில் அளித்த தளர்வுகள் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருப்பூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கோவை ஆகிய ஊர்களை தவிர்த்து சென்னை, மதுரை, பழனி, திருச்சி, சிதம்பரம், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு 47 பஸ்களும், 23 நகர பஸ்களும் என 70 பஸ்களை இயக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட எல்லைப்பகுதியான மதனத்தூர் வரை பஸ் இயக்கப்படுகிறது.
இதற்காக ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் அமரும் இருக்கைகள், படிக்கட்டுகள் உள்பட பஸ்சின் முழு பகுதியும் தண்ணீரை வைத்து துடைக்கப்பட்ட பின்னர் கிருமி நாசினி தெளித்து முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது.
இதேபோல் முகப்பு விளக்குகள், டயர்கள் சரியாக உள்ளதா? என்று சரிபார்க்கப்பட்டு, பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றன. 50 சதவீத பயணிகள் அனுமதிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டு தயார் நிலையில் பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் வருவார்கள் என்றும், பணிமனைக்குள் பணியாளர்கள் வருவதற்கு முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர், உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story