திருச்சி-தஞ்சை சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி: சத்திரத்தில் இருந்து துவாக்குடிக்கு மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து


திருச்சி-தஞ்சை சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி: சத்திரத்தில் இருந்து துவாக்குடிக்கு மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து
x
தினத்தந்தி 27 Jun 2021 6:44 PM GMT (Updated: 27 Jun 2021 6:44 PM GMT)

திருச்சி, தஞ்சை சாலையில் தரைப்பாலம் கட்டும் பணியால் சத்திரத்திலிருந்து துவாக்குடிக்கு மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகின்றன.

திருச்சி, 
திருச்சி, தஞ்சை சாலையில் தரைப்பாலம் கட்டும் பணியால் சத்திரத்திலிருந்து துவாக்குடிக்கு மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகின்றன.

தரைப்பாலம் அமைக்கும் பணி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே திருச்சி- தஞ்சை சாலையில் தாராநல்லூர் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் சாலையின் குறுக்கே இருபுறமும் பள்ளம் வெட்டி தரைப் பாலம் அமைக்கும் பணி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அரியமங்கலம் பழைய பால்பண்ணையில் இருந்து காந்தி மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்படவில்லை. 

அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் தான் சுற்றி செல்கின்றன. இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டால் அந்த வழித்தடத்தில் பஸ்கள் செல்ல முடியாது. ஆகவே சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி செல்லும் பஸ்கள் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் கூறுகையில், "திருச்சி, தஞ்சை சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே தலை பாலம் கட்டும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு செல்லும் பஸ்கள் ஓடத்துறை, ஓயாமரி சுடுகாடு, சஞ்சீவி நகர் வழியாக சுற்றி அரியமங்கலம் பால்பண்ணையை அடைந்து அங்கிருந்து துவாக்குடிக்கு செல்லும். பின்னர் மீண்டும் அதே வழித்தடத்தில் சத்திரம் பஸ் நிலையத்தை வந்தடையும். தரைப்பாலம் கட்டுமான பணிகள் முடியும் வரை இதே வழித்தடத்தில் தான் பஸ்கள் இயக்கப்பட உள்ளன" என்று கூறினார்.

Next Story