திருச்சி மண்டலத்தில் 735 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன
திருச்சி மண்டலத்தில் 735 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன. இதற்காக அவை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.
திருச்சி,
திருச்சி மண்டலத்தில் 735 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன. இதற்காக அவை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.
பஸ் போக்குவரத்து அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 7-வது முறையாக வருகிற ஜூலை 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழாவது முறை ஊரடங்கு நீட்டிப்பின் போது திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்குவதற்கான தளர்வுகளை அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பு பொதுப் போக்குவரத்தை நம்பியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுத்தப்படுத்தும் பணி
பொதுப்போக்குவரத்து இன்று முதல் இந்த 23 மாவட்டங்களில் தொடங்கும் என்பதால் பஸ்களை இயக்குவதற்கான முன்னேற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டனர்.திருச்சி மண்டலத்தில் உள்ள புறநகர் மற்றும் மாநகர், மலைக்கோட்டை பணிமனைகளில் நேற்று பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பஸ்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இருக்கைகளில் 50 சதவீத பயணிகள் அமர்வதற்கு தகுந்தபடி குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. பஸ்களை இயக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர் தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரும் நேற்று கிளைகளுக்கு வந்து தங்களுக்கு பணியாணை வழங்கப்படுவதற்கான உத்தரவுகளை பெற்றனர்.எனவே திருச்சி மண்டலத்தில் இன்று காலை முதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.
735 பஸ்கள் இயக்கப்படும்
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல் கூறும்போது‘திருச்சி மண்டலத்தில் உள்ள அரசு பஸ்களில் 80 சதவீத பஸ்கள் அதாவது 735 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படும். அவற்றில் 399 டவுன் பஸ்கள் ஆகும். 50 சதவீத அளவிற்கு மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை, எதிர்பார்ப்பை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும். மதுரை, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு திருச்சி மண்டல பஸ்கள் செல்லும். சென்னைக்கும் இயக்கப்பட இருக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் வகை ஒன்றில் இருப்பதால் எங்களது பஸ்களை கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
மத்திய பஸ் நிலையம்
திருச்சியில் இன்று முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதையொட்டி இதுவரை மீன் மொத்த விற்பனை மையமாக செயல்பட்டு வந்த திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
வழித்தட எல்லை அறிவிப்பு
பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எல்லைப்பகுதி வரை பஸ்கள் இயக்கப்படும் விவரம் வருமாறு:-
1.திருச்சி - கரூர் வழித்தடத்தில் பெட்டவாய்தலை வரை.
2.திருச்சி - சேலம் வழித்தடத்தில் தொட்டியம் மேக்கல்நாயக்கன்பட்டி வரை.
3.திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தில் வாழவந்தான்கோட்டை வரை.
4.துறையூர் - சேலம் வழித்தடத்தில் மங்கம்பட்டி வரை.
5.துறையூர் - நாமக்கல் வழித்தடத்தில் பவித்திரம் வரை
6.பெரம்பலூர்-ஆத்தூர் வழித்தடத்தில் வீரகனூர் வரை.
7.அரியலூர் - தஞ்சாவூர் வழித்தடத்தில் திருமானூர் வரை.
8.ஜெயங்கொண்டம் - கும்பகோணம் வழித்தடத்தில் அணைக்கரை வரை.
இவை தவிர மற்ற மாவட்டங்களக்கு வழக்கமான இயக்கப்பகுதி முழுவதும் பஸ்கள் இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story