திருப்பத்தூர்,
சிங்கம்புணரி, திருப்பத்தூரில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதிரடி ஆய்வு
திருப்பத்தூர் சின்னக்கடைவீதியில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சையத் இப்ராஹிம், காரைக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனைக்கு வைத்திருந்த கெட்டு போன பழைய ஆட்டுக்கறியை 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் ஆய்வின் போது 5 கிலோ தடை விதிக்கப்பட்ட பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டன.
பழைய இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம், அதிகாரிகள் கூறும் போது, இது போன்ற தவறுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பினாயில் ஊற்றி அழித்து மண்ணில் புதைத்தனர். இந்த பணியில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் மற்றும் கவிதா ஆகியோர் ஈடுபட்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பெரிய கடைவீதியில் உள்ள இறைச்சிக்கடைகளிலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறைச்சி கடை நடத்துபவர்கள் முறையாக உரிமம் பெற்று இருக்கிறார்களா? செம்மறி, வெள்ளாடு என தரம் பிரித்து வாடிக்கையாளர்களிடம் கூறி விற்பனை செய்ய வேண்டும். பார்சலுக்கு தடை விதிக்கப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தக்கூடாது. தேர்வு நிலை பேரூராட்சி மூலம் ஆடுகளை வெட்ட வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்றால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.