கூட்டுறவு துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி: பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வையம்பட்டி,
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு வேலைக்கு ரூ.8 லட்சம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செட்டியபட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.
இந்தநிலையில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க.வை சேர்ந்த பூவை செழியனிடம் கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தரக்கோரி சின்னசாமி ரூ.8 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், பணம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், சின்னச்சாமி தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி செழியனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவா் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதனால் மனமுடைந்த சின்னச்சாமி, வையம்பட்டி போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அவர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததுடன், சென்னையில் சின்னச்சாமி தீக்குளிக்க முயன்றார்.
இதைத்தொடா்ந்து, இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
இந்தநிலையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த சின்னச்சாமி புகார் மனு மீது தற்போது வையம்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் மீது ஆபாசமாக பேசுதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story