கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஹாவேரியில் 2¾ லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஹாவேரியில் 2¾ லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 28 Jun 2021 2:45 AM IST (Updated: 28 Jun 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஹாவேரி மாவட்டத்தில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 2¾ லட்சம் குழந்தைகளுக்கு உடல் மருத்துவ பரிசோதனை பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

  
 சட்டம் மற்றும் போலீஸ் துறை மந்திரியும், ஹாவேரி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தடுப்பூசி போட நடவடிக்கை

  கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் ஹாவேரியில் குழந்தைகளுக்கு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம். இது ஒரு மாதம் நடைபெறும். குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படக்கூடாது என்ற நோக்கதில் இந்த உடல் மருத்துவ பரிசோதனையை செய்கிறோம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இது கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி தொடங்கியது. வருகிற 30-ந் தேதி நிறைவடைகிறது. ஹாவேரி மாவட்டத்தில் 2¾ லட்சம் குழந்தைகளுக்கு இந்த உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடல் பிரச்சினைகள்

  குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் உடல்நிலையை சீரான நிலையிலும், அவர்களை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து காக்க வேண்டியது நமது கடமை. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த உடல் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

  ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு உரிய மருந்து-மாத்திரைகள், ஊட்டச்சத்து உணவு தொகுப்பு அரசால் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குழந்தைகளின் உடல்நிலை குறித்த விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். குழந்தைகளில் யாருக்காவது உடல் பிரச்சினைகள் இருந்தால் அவர்களை அடுத்த 4, 5 மாதங்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story