திருத்தணியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை தந்தை சிறைக்கு சென்றதால் மனமுடைந்து விபரீதம்
திருத்தணியில் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டு சிறைக்கு போனதால் மன உளைச்சலுக்கு ஆளான கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சேகர் வர்மா நகரில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களது மகன் ரஞ்சித் குமார் (வயது 24). இவர் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது தாயார் ரஞ்சிதா அரக்கோணத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ரஞ்சித்குமாரின் தந்தை ரவி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன் ரஞ்சித் குமார் தனது தந்தையை சந்திக்க வேலூர் சிறைக்கு சென்று வந்தார். அதன்பிறகு தனது தாயாரிடம் தந்தை எப்போது வருவார் என்று கேட்டு வந்துள்ளார்.
மேலும் தந்தை சிறைக்கு சென்றதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரஞ்சிதா பஜார் பகுதிக்கு பொருட்களை வாங்க சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ரஞ்சித்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரஞ்சிதா திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த போலீசார் உடனடியாக சென்று ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story