கம்பத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் வியாபாரிகள் அதிர்ச்சி
தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பத்தில், 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ரெடிமேடு ஆடை உற்பத்தி, மாடு வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் கம்பம்மெட்டு, குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கம்பத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும் காய்கறிகள் வாங்குவதற்கு கேரளா மட்டுமின்றி கம்பத்தை சுற்றியுள்ள கிராமமக்கள் மற்றும் வியாபாரிகள் கம்பத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் நகர் பரபரப்பாக காணப்படும். இதை மர்ம நபர்கள் பயன்படுத்திக்கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
கம்பம் மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவர் கடையில் பொருட்கள் விற்றதில் கிடைத்த பணத்தை வங்கியில் செலுத்தினார். அப்போது வங்கி அதிகாரிகள் பணத்தை சரி பார்த்தனர். இதில் ஆனந்த் கொடுத்த பணத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று இருந்தது. இதை வங்கி அதிகாரிகள் கள்ளநோட்டு என்று கூறி அவரிடம் திருப்பி கொடுத்தனர். இந்த கள்ள ரூபாய் நோட்டு ஒரிஜினல் பணத்தை விட தடிமன் குறைவாக உள்ளது. மேலும் ரூபாய் நோட்டில் நீரோட்ட குறியீடு இல்லை.
வேதனை அளிக்கிறது
இது குறித்து மளிகை வியாபாரி கூறுகையில், கடைகளில் கூட்ட நெரிசலாக இருக்கும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுகளை சரி பார்க்க முடியாது. இதனை பயன்படுத்தி கொண்டு மர்மநபர்கள் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு செல்கின்றனர். இந்த நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போதுதான் அவை கள்ளநோட்டுகள் என தெரிய வருகிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மர்மநபர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது பெரும் வேதனை அளிக்கிறது. எனவே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கம்பத்தில் 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளது வியாபாரிகளை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
-
Related Tags :
Next Story