மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதி கேட்டு சாலையில் திரண்ட வியாபாரிகள்
கோத்தகிரியில் மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் மார்க்கெட் கடைகளை திறக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
மார்க்கெட்டுகள் மூடல்
தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கோத்தகிரி பகுதியில் அரசு அனுமதித்த அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மேலும் காந்தி மைதான திறந்தவெளி காய்கறி மார்கெட் மற்றும் பேரூராட்சி மார்கெட்டில் கடைகளை திறக்க வியாபாரிகள் வந்தனர்.
ஆனால் காந்தி மைதானம் மற்றும் பேரூராட்சி மார்கெட் நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்தது. இதை கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனிடம் முறையிட்டனர். அதன்பிறகும் மார்கெட்டுகள் திறக்கப்படவில்லை.
பரபரப்பு
இதற்கிடையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் கலந்துகொள்ள கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வர உள்ளது, வியாபாரிகளுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் தாசில்தார் அலுவலக சாலையில் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறினர். மேலும் 2 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. அதன்பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு கலெக்டர் வந்தார். அவரை வியபாரிகள் சந்தித்தனர்.
ஆலோசனை நடத்தி முடிவு
அப்போது அவர்கள் கூறுகையில், பேரூராட்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. அங்கு பிற கடைகள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மார்க்கெட்டுகளில் கூட்டம் கூட வாய்ப்பு இல்லை. எனவே மார்க்கெட்டுகளை திறக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்து கலெக்டர் கூறும்போது, குன்னூர், ஊட்டியில் இருந்தும் மார்க்கெட்டுகளை திறக்க கோரிக்கை வந்து உள்ளது. எனவே ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.
பின்னர் கோரிக்கை மனு அளித்துவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story