காதல் கணவருடன் தீக்குளிக்க முயன்ற கல்லூரி மாணவி
காதல் கணவருடன் கல்லூரி மாணவி தீக்குளிக்க முயன்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தனர்.
பின்னர் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தங்களுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் தடுத்து மீட்டனர். மேலும் 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அருகே உள்ள வி.கூத்தம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வர் (வயது 21), கஜோனியா (19) என்பது தெரியவந்தது.
காதல் திருமணம்
இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில், புவனேஸ்வர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். கஜோனியா கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை வெளியேறி திருமணம் செய்தனர்.
இதனை ஏற்காத பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்து உள்ளனர். அப்போது விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக போலீசார் கூறினர்.
இதைத் தொடர்ந்து 2 பேரையும் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். காதல் திருமணம் செய்த ஜோடி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story