கோட்டூர் அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திய மர்ம நபர்கள் கார் பழுதடைந்ததால் நடுரோட்டில் விட்டு சென்றனர்


கோட்டூர் அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திய மர்ம நபர்கள் கார் பழுதடைந்ததால் நடுரோட்டில் விட்டு சென்றனர்
x
தினத்தந்தி 28 Jun 2021 9:55 PM IST (Updated: 28 Jun 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே ஆடுகளை திருடி காரில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். அப்போது அவர்களை பொது மக்கள் துரத்தி சென்ற போது நடுரோட்டில் கார் பழுதடைந்தது. இதனால் அவர்கள் ஆடுகளுடன் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவி்்ட்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நல்லூர் ஊராட்சி சோமசேகரபுரம் கிராமத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு சில மர்ம நபர்கள் காரில் வந்தனர். இவர்கள் அக்கிராமத்தை சேர்ந்த குபேந்திரன்(வயது46) என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை யாருக்கும் தெரியாமல் திருடி அவர்கள் வந்த காரின் பின்புறம் உள்ள டிக்கியில் வைத்து அடைத்தனர். பின்னர் அவர்கள் மேலும் சில வீடுகளில் இருந்து 3 ஆடுகளை திருடி கார் டிக்கியில் ஏற்ற முயன்றனர்.

விரட்டி சென்ற மக்கள்

அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் சந்தேகம் அடைந்த மக்கள் அப்பகுதியில் கூடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் 3 ஆடுகளையும் வேகமாக கார் டிக்கியில் ஏற்றிக்கொண்டு மொத்தம் 6 ஆடுகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் ஆடுகளை திருடி செல்வதை கண்ட ஊர்மக்கள் அவர்களை விரட்டி சென்றனர்.

பறிமுதல்

மன்னார்குடி சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது இரட்டை புலி என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக கார் பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. இதனால் செய்வதறியாது திகைத்த மர்ம நபர்கள் ஆடுகளுடன் காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்களர் போலீசார் கடத்தப்பட்ட ஆடுகள், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story