விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு பஸ்கள் ஓடின பயணிகள் மகிழ்ச்சி


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்  அரசு பஸ்கள் ஓடின  பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Jun 2021 10:50 PM IST (Updated: 28 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு பஸ்கள் ஓடின. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம், 

பொது போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவினால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் நோய் தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கியதையடுத்து நோய் பரவலின் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து ஒவ்வொரு வாரமும் 3 வகை மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக 7-வது முறையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்த அரசு, அதே வேளையில் வகை 2-ல் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் குளிர்சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பஸ்கள் ஓடின

இதன் அடிப்படையில் வகை 2-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. 
இதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மேல் அந்தந்த போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பஸ்கள் புறப்படுவதற்கு முன்பாக பணிக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு  தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காலை 6.30 மணி முதல் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் மொத்தம் 3,166 பஸ்கள் உள்ளன. இவற்றில் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மண்டல பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்தை பொறுத்தவரை 665 அரசு பஸ்களில் 422 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 138 நகர பஸ்களும், 125 புறநகர் பஸ்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57 நகர பஸ்களும், 102 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன.

குழு நியமனம்

மேலும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கவும், அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்சில் ஏறிச்செல்ல வேண்டும் என்பதற்காகவும் அனைத்து பஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கென போக்குவரத்துக்கழகம் தனியாக ஒரு குழுவை நியமித்துள்ளது. அந்த குழுவினர், பயணிகள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே பஸ்சிற்குள் ஏற அனுமதித்தனர்.

மகிழ்ச்சி

இந்த சோதனை முடிந்த பிறகு ஒவ்வொரு பயணியும் தங்கள் கைகளை சானிடைசர் திரவத்தால் நன்கு சுத்தம் செய்த பிறகே இருக்கையில் அமர்ந்தனர். அதுபோல் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணம் செய்தனர். முக கவசம் அணியாமல் வந்த பயணிகளை பஸ்சில் பயணிக்க அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு பஸ்சிலும் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்தனர். அதாவது 52 இருக்கைகள் அடங்கிய பஸ்சில் 32 பயணிகளும், 44 இருக்கைகள் அடங்கிய டவுன் பஸ்களில் 26 பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
 பிறகு அரசு பஸ்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஒரு சில பஸ்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே பயணிகள் பயணம் செய்ததை காண முடிந்தது.

கலெக்டர் ஆய்வு

இதனிடையே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் டி.மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டு பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Next Story