கம்மாபுரத்தில் பரபரப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்
கம்மாபுரத்தில், அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்குள் பாம்பு புகுந்தது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கம்மாபுரம்,
கம்மாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வட்டார சுகாதார அலுவலகத்தின் தலைமையிடமாக இந்த சுகாதார நிலையம் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மேலும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகளும் இங்கு பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று காலை வழக்கம் போல் மருத்துவமனை பரபரப்புடன் இயங்கியது. ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காத்திருந்தனர்.
அப்போது, அந்த வளாகத்தின் உள்ளே பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை பார்த்த நோயாளிகள் அலறி அடித்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். உடன், மருத்துவமனை ஊழியர்கள் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
படமெடுத்து சீறியது
அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் அங்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முற்பட்டனர். அதற்குள் அந்த பாம்பு அங்கிருந்து வெளியே சென்று, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கீழ் பகுதியில் பதுங்கியது.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அதை கருவிகளை கொண்டுபிடிக்க முயன்றனர். அப்போது, அந்த பாம்பு படம் எடுத்தபடி சீறியது. அப்போதுதான் அது நல்ல பாம்பு என்பது தெரியவந்தது.
இருப்பினும் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதை விருத்தாசலம் காப்பு காட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட நல்ல பாம்பு 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story