மேட்டுப்பாளையத்தில் மயக்க ஊசியில் இருந்து தப்பிய பாகுபலி யானை


மேட்டுப்பாளையத்தில் மயக்க ஊசியில் இருந்து தப்பிய பாகுபலி யானை
x
தினத்தந்தி 28 Jun 2021 11:40 PM IST (Updated: 28 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் 2-வது நாளாக பாகுபலி யானை தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மயக்க ஊசியில் இருந்து யானை தப்பியதால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் 2-வது நாளாக பாகுபலி யானை தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மயக்க ஊசியில் இருந்து யானை தப்பியதால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

பாகுபலி யானை

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த யானை விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்ததால், யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக டாப்சிலிப்பில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாரன் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர்கள் பழனி ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து பாகுபலி யானையை தேடி வருகின்றனர்.

தீவிர தேடுதல் வேட்டை

நேற்று முன்தினம் வேடர்காலனி அருகே பாகுபலி யானை நின்றது. உடனே மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர். அதற்குள் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. மழை மற்றும் மாலை நீண்ட நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பாகுபலி யானையை தேடும் பணி தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் ஓய்வுபெற்ற வனத்துறை கூடுதல் துணை இயக்குனர் மனோகரன் மருத்துவ அலுவலர்கள் பிரகாஷ் ராஜேஷ்குமார், ஆகியோர் ஜக்கனாரி கல்லாறு வனப்பகுதியிலும்,

 வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி வனப்பாதுகாவலர் தினேஷ் குமார் தலைமையில் மருந்து குடோன் பகுதியிலும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் அசோகன் உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஓடந்துறை காப்புக் காட்டு பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மயக்க ஊசியில் இருந்து தப்பியது

இந்த நிலையில் கல்லாறு வனப்பகுதியில் பாகுபலி யானை நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே முதுமலை வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை பாகுபலி யானைக்கு நோக்கி செலுத்தினார். 

அப்போது, பாகுபலி யானை மயிரிழையில் மயக்க ஊசியில் இருந்து தப்பி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.இதையடுத்து வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானையை சமவெளிக்கு கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பாகுபலி யானை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கோத்தகிரி சாலையை கடந்து சிறுமுகை வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது மயக்க ஊசி செலுத்த யானையை விரட்டினர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

Next Story