தர்மபுரி மாவட்டத்தில் தொற்று குறைந்ததால் ஜவுளி-நகைக்கடைகள் திறப்பு வணிகர்கள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் தொற்று குறைந்ததால் ஜவுளி-நகைக்கடைகள் திறப்பு வணிகர்கள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தொற்று குறைந்துள்ள நிலையில் ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் இருந்து ஜவுளி, நகைக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வணிகர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஜவுளி, நகைக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளருடன் திறப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து உள்ளார்.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் நகை, ஜவுளிக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நகைகள் மற்றும் ஜவுளிகள் வாங்க சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகளும், 1,500-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன.
தர்மபுரி நகரில்...
தர்மபுரி நகரில் 175-க்கும் மேற்பட்ட நகை கடைகளும், 300-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகளும் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நேற்று காலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வியாபாரம் தொடங்கப்பட்டது. இதனால் தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளான சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, நாச்சியப்ப கவுண்டர் தெரு, துரைசாமி கவுண்டர் தெரு உள்ளிட்ட சாலைகள் வழக்கம்போல் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்த கடைகள் அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் அதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, நல்லம்பள்ளி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜவுளிகடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
=======
Related Tags :
Next Story