பாம்பன் பகுதியில் நிறம் மாறிய கடல் நீர்
மண்டபத்தை தொடர்ந்து பாம்பன் கடல் பகுதியிலும் கடல் நீர் நிறம் மாறியது.
ராமேசுவரம்
மண்டபத்தை தொடர்ந்து பாம்பன் கடல் பகுதியிலும் கடல் நீர் நிறம் மாறியது.
நிறம் மாறியது
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் கடற்கரை பூங்கா முதல் மரைக்காயர் பட்டினம், வேதாளை வரையிலான தென்கடல் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாகவே கடல் நீரில் பச்சை பாசி படர்ந்து நிறம் மாறிய நிலையில் காட்சி அளித்து வருகின்றது.
இந்தநிலையில் மண்டபம் வேதாளை வரையிலான கடல் பகுதியில் மட்டுமே கடல் நீர் நிறம் மாறி காட்சி அளித்து வந்த நிலையில் நேற்று முதல் பாம்பன் கடல் பகுதியிலும் பச்சைப் பாசிகள் படர்ந்து கடல் நீர் நிறம் மாறிய நிலையில் காட்சி அளித்து வருகின்றது. குறிப்பாக ரோடு பாலத்தின் அடியில் உள்ள கடல் பகுதி முழுவதும் வெளிர்ந்த பிரவுன் நிறத்தில் காட்சி அளித்து வருகின்றது.
பாதிப்பா?
இதுகுறித்து மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறியதாவது, மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் முதல் வேதாளை வரையிலான கடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே கடல் நீர் நிறம் மாறிய நிலையில் காட்சி அளித்து வருகின்றது. தற்போது பாம்பன் கடல் பகுதியிலும் கடல் நீர் நிறம் மாறி உள்ளது. இதுகுறித்து கடல் நீரை சேகரித்து ஆய்வு நடத்தினோம். அதில் கடலில் பச்சை பாசி மற்றும் பூங்கோறை என்ற இரண்டு வகையான பாசிகள் கடலில் படர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த சீசனில் பூங்கோறை பாசிகள் கடலில் படர்ந்து வருவது வழக்கமான ஒன்றுதான்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதாலும், காற்றின் வேகம் இருப்பதாலும் இந்த பாசிகள் கரையில் ஒதுங்கி அழிந்து விடும். இதனால் மீன்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருக்காது. அதுபோல் பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பகுதி பாசிகள் படர்ந்து தான் நிறம் மாறி உள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நுரை போன்று தெரிந்து வருகின்றது. இலங்கை கொழும்பு கடல் பகுதியில் தீ பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய கப்பலுக்கும், தற்போது கடல் நீர் நிறம் மாறி இருப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்றார்.
Related Tags :
Next Story